×

பெண்களை பாதுகாப்போம்

‘‘சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்’’ என்றார் மகாகவி பாரதி. இந்த வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கும் விதமாக, பெண்கள் இன்று மண்ணிலும், விண்ணிலும் பல்வேறு துறைகளில் மகத்தான சாதனைகளை செய்து வருகின்றனர்.  பெண்கள் என்னதான் வளர்ச்சி அடைந்தாலும், அவர்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மட்டும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த ஆன்லைன் வகுப்பில், ஆசிரியர் அரை நிர்வாண கோலத்தில் பாடம் நடத்தியது, தகாத வார்த்தைகளுடன் மாணவிகளுக்கு மெசேஜ் அனுப்பிய விவகாரம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் கடந்த 15 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேல்நிலை வகுப்புகளுக்காக சில வாரங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகத்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வீட்டில் இருந்தபடியே கற்கும் இவ்வகுப்பிலேயே ஒரு ஆசிரியர், மாணவிகளிடம் தவறான முறையில் பேசி வந்தது பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்றால் பள்ளிக்கு சென்று படிக்கும் மாணவிகளின் கதியை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சமூக வலைத்தளங்களை தொடர்ந்து காவல்துறைக்கும் முன்னாள், இந்நாள் மாணவிகள் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் வகுப்பில் முறையற்ற வகையில் நடந்தால், ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இவ்வகுப்புகளை பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் குழு ஆய்வு செய்ய வேண்டும். வகுப்புகளை முறைப்படுத்த கண்காணிப்புக்குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பள்ளி மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கவுன்சலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கவுன்சலிங்கின்போது குடும்பத்தினர், உறவினர்கள், ஆசிரியர்கள் உட்பட யார் மூலமாவது, மாணவி பாலியல் சீண்டல்களை சந்தித்தாரா என விசாரணை நடத்தப்படும். விசாரணையில் புகார் கூறும் மாணவிகளின் பெயர் ரகசியம் காக்கப்படும். அவர்கள் அவ்வாறு நடந்ததாக தெரிவித்தால், காவல்துறையில் புகார் தெரிவித்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கவுன்சலிங் முறையை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டுமென்று முதல்வருக்கு, மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரம் பெற்றோர், தங்களது பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் தவறான சம்பவங்கள் நடக்கிறதா? மன நெருக்கடியின்றி வெகு இயல்பாக இருக்கின்றனரா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வளரும் பருவத்தில் ‘‘குட் டச்’’, ‘‘பேட் டச்’’ போன்றவற்றை சொல்லித் தர வேண்டும். ஆண் குழந்தைகளுக்கும் பெண்களை மதிக்கும் முறைகளை கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும்….

The post பெண்களை பாதுகாப்போம் appeared first on Dinakaran.

Tags : Earth ,Mahakavi Bharati ,
× RELATED மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்!